யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சர்வதேச யோகா தினவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.

Update: 2022-06-21 16:29 GMT

சர்வதேச யோகா தினவிழா

உடலுக்கு உறுதியும், மனதுக்கு உற்சாகமும் தருவது யோகா. இதை உலகம் முழுவதும் வாழும் மக்கள் பெற வேண்டும் என்ற வகையில் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு தொழில் அதிபர் ஜி.சுந்தராஜன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, யோகாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மாணவ-மாணவிகள் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர். மாணவர்களுடன் அலுவலர்களும் யோகாசனம் செய்தனர். இதையடுத்து யோகா தினவிழாவில் பங்கேற்று யோகாசனம் செய்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

அரசு மருத்துவ கல்லூரி

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் 'மனிதாபிமான யோகா' என்ற தலைப்பில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் சலீம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ராஜவேல், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு தடாசனம், திரிகோண ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்பட 20 வகையான ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் யோகா பிரிவு டாக்டர்கள் தேவராஜ், அம்சலட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி உடல் கூறியியல் பிரிவு உதவிப் பேராசிரியர்கள் ஜோதி கணேசன், கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர். பயிற்சியின் நிறைவில் நோய் எதிர்ப்பு சக்தி பானம் மற்றும் இயற்கை உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நீதிமன்றங்கள்

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி லதா தலைமை தாங்கினார். விழாவில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்தனர். மேலும் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியையும் மேற்கொண்டனர்.

இதேபோல் ஆத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஜெய்சங்கர் தலைமையிலும், வேடசந்தூர் சப்-கோர்ட்டில் நீதிபதி சரவணக்குமார் தலைமையிலும் யோகா தின விழா நடைபெற்றது. நத்தம் கோர்ட்டு வளாகத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உதயசூர்யா தலைமையில் யோகா தின விழா நடைபெற்றது. இதில், சித்த மருத்துவர் வசந்தகுமார் கலந்துகொண்டு கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு யோகாசன பயிற்சிகளை அளித்தார்.

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான கே.சி.பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் யோகா தினவிழா நடைபெற்றது. கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலர் பழனிராசு முன்னிலை வகித்தார். இதில், யோகா பயிற்சியாளர் பார்த்தீப கண்ணன் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் குறித்து பயிற்சி அளித்தார். அதன்படி, மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்