கிராமங்களில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை-ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை

கோடை தொடங்கிவிட்டதால் கிராமங்களில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2023-04-21 18:45 GMT

கோடை தொடங்கிவிட்டதால் கிராமங்களில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர்கள் ஜெகநாதசுந்தரம், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சந்தான கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

துணைத் தலைவர் கேசவன்:- எனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்பொழுது கோடைகாலம் என்பதால், தண்ணீர் தடுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வீட்டுக்கு வீடு போடப்பட்ட குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. அதை சரிசெய்ய வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நமது ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணியங்குடி ஊராட்சியில் வருகிறது. எனவே மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையை சுற்றி ஆம்புலன்சு செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ரோட்டில் நடை பாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.

கிராமங்களில் தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிரவிட வேண்டும்.

கூடுதல் நிதி

கவுன்சிலர் ரமேஷ்:- பொது நிதியிலிருந்து மற்ற செலவுகள் செய்யும் போது குறைத்து செலவிட வேண்டும். மாத்தூர் கிராமத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர்கள் நதியா-பத்மாவதி:- ஒன்றிய கூட்டத்துக்கு கல்வித்துறை மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் வருவதில்லை. மின்வாரியம் தொடர்பான புகார்களை நாங்கள் தெரிவித்தாலும் அவர்கள் சரி செய்து கொடுப்பதும் இல்லை. அழகு முத்துப்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை.

கவுன்சிலர் கருப்பணன்:- சிவகங்கை காந்திவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டால் ஒன்றியத்திற்கு வருமானம் கிடைக்கும். மேலும் நமது ஒன்றியம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் இருப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சொல்லப்படும் பல செலவுகளை தனியாக செய்ய வேண்டி உள்ளது. எனவே நமது ஒன்றியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் ச.பத்மாவதி:- மானாக்குடி ஊராட்சியில் ஆழ்குழாய் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதில் இணைப்பு கொடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. முடிவில் சுப்பு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்