அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்
ஊட்டி,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக நேற்று ஊட்டிக்கு வர இருந்தார். ஆனால் திடீரென்று பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
இதன்படி கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பயணித்து வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த பை உள்பட அனைத்தையும் ஒன்று விடாமல் சோதனை செய்தனர்.
சுமார் 15 நிமிட சோதனையில் பணமோ பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. அதன்பின்னர் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் ஆ.ராசாவைஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதன் பின்னர் குன்னூரில் பிரசாரம் செய்து கோவை செல்கிறார்.