ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலில் 1,008 பால் குட அபிஷேகம் திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்

1,008 பால் குட அபிஷேகம்

Update: 2022-08-09 17:24 GMT

ஊஞ்சலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17-வது ஆண்டாக 1,008 பால் குட அபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் லட்சார்ட்சனை வேள்வி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 9.30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாரியம்மன் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து அம்மன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக காவிரி ஆற்றின் கரையில் உள்ள நாகேஸ்வரர் கோவிலுக்கு சென்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் நாகேஸ்வரர் கோவிலில் வைத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனிடையே ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொளத்துப்பாளையம், கருக்கம்பாளையம், அமராவதி புதூர், சொட்டையூர், வள்ளியம்பாளையம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து நாகேஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து 10.30 மணி அளவில் சப்பரத்தில் மாரியம்மன் முன்னே செல்ல, திரளான பக்தர்கள் பால் குடத்தை சுமந்தபடி பின்னே ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் முதலில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலத்தின் பெண் பக்தர்களில் ஒரு பிரிவினர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். காலையில் துவங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்து நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்