அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மலையிட பகுதியில்லாத இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2024-08-18 00:25 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

1971-ம் ஆண்டு நகர ஊரமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, 2020-ம் ஆண்டு தமிழ்நாடு மலைப் பகுதிகளிலுள்ள அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை ஒழுங்கு முறைப்படுத்தும் விதிகளில் திருத்தத்தை மேற்கொண்டு, 20-10-2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30-11-2024 வரை கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் 18-07-2024 தேதியிட்ட அரசாணை எண் 132 வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை மட்டுமே வரன்முறை செய்து கொள்ள முடியும்.

இதேபோன்று, மலைப் பகுதியில்லாத இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளையும் வரன்முறை செய்வதற்கேற்ப அரசாணை வெளியிட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருப்பதால், இதனை பரிசீலிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மலைப் பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பளித்துள்ளது போன்று, பிற இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளையும் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்