அனுமதி இல்லாத கட்டுமானப் பணிகள்; சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்டு
சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியில் ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் எனவும் சி.எம்.டி.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடக்காது என உத்தரவாதம் அளித்ததால், அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியதுடன், திட்ட அனுமதியை பின்பற்றித்தான் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறி விட்டதாக அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வுக்கு தலா 5 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 2 லட்ச ரூபாய், எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.