கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்: விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து ெகாண்டாா்.
வால்பாறை
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து ெகாண்டாா்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவர் கணவரை இழந்து தனது மகனான முருகேஷ் (வயது 20) என்பவருடன் வசித்து வருகிறார். முருகேஷ், ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். இந்தநிலையில் வருகிற 10-ந் தேதிக்குள் கல்லூரி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டிய நிலை இருந்து உள்ளது.
எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலை செய்து வரும் தனது தாயால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று கூறி வந்ததோடு மிகுந்த மன வருத்தத்தில் இருந்து உள்ளார். மேலும், கல்லூரி கட்டணம் கட்ட முடியவில்லை என்றால் தனது படிப்பை தொடர முடியாமல் போய் விடும் என்ற விரக்தியில் இருந்த முருகேஷ் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் முருகேசை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவா் முருகேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில்மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.