சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினால் பா.ஜனதா வளர்ச்சி அடையும்- மதுரையில் அண்ணாமலை பேட்டி
சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினால் பா.ஜனதா வளர்ச்சி அடையும் என மதுரையில் அண்ணாமலை கூறினார்.
சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினால் பா.ஜனதா வளர்ச்சி அடையும் என மதுரையில் அண்ணாமலை கூறினார்.
பேட்டி
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, மீண்டும் சென்னை செல்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் அப்படி பேசினால் நல்லதுதான். அப்போதுதான் பா.ஜ.க. வளரும்.
தி.மு.க.வின் குடும்ப அரசியல், ஒவ்வொரு நாளும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் குடும்ப அரசியல் மூலம் அமைச்சர்கள் ஆகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு. ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்கமுடியும். உண்மையான சனாதனம் பற்றி அவருக்கு தெரியாமல் இருக்கும். ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தலைக்கு விலை வைப்பதற்கு யார் அவர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு ஒரு வரைமுறை உள்ளது. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 1952-ல் இருந்து 1967 வரை 4 முறை ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைபெற்றுள்ளது. இது பா.ஜ.க.வின் கொள்கை முடிவுதான். ஆனாலும்கூட உடனடியாக கொண்டு வர முடியாது. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி கொண்டுவர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாரத் பெயர் மாற்றப்படுவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும், பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார்.
எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பில்லை
எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை இந்தியா என்ற பெயரை வைத்ததனால் தான், பாரத் என பெயர் மாற்றுவதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு, எப்பொழுதும் மக்கள் அவர்களைப் பற்றியே பேசுவதாக நினைக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ கருத்துக்கள் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்து மாநில தலைவராக நான் கருத்துக்கூற எதுவும் இல்லை.
ஜி- 20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். அது கட்சித் தலைவரை அழைப்பதற்கான மாநாடு அல்ல. அப்படி என்றால் ஜே.பி.நட்டாவையும் தான் அழைத்திருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவரை அழைக்க வேண்டும் என்றால், ஜே.பி. நட்டாவையும் அழைக்க வேண்டும் என்று நான் குற்றம் சாட்டுவேன். முன்னாள் பிரதமர்கள் மற்றும் தற்போதைய முதல்-அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரை அழைக்க வேண்டுமோ அவர்களை அழைத்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.