புதர்மண்டி கிடக்கும் இருசக்கர வாகனங்கள்

கடலூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் புதர்மண்டி கிடக்கின்றன. மேலும் அவை துருப்பிடித்து வீணாகிறது.

Update: 2023-09-13 18:45 GMT

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல், குவியலாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள், மாட்டு வண்டிகள், ஆட்டோகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருக்கும். அந்த வாகனங்கள் அனைத்தும் புழுதி படிந்து, துருப்பிடித்து எதற்குமே லாயக்கற்ற நிலையில் கிடக்கும். வாகனங்களை சுற்றிலும் செடி- கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படும். அவை விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி இருக்கும்.

குற்ற வழக்குகளில்...

அந்த வகையில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானம் எதிரிலும், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள், மதுபோதையில் இருக்கும் நபர்களால் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

புதரால் சூழப்பட்ட வாகனங்கள்

இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், வழக்கு முடிந்தவுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏலம் விடப்படுகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டவைகளில் யாரும் உரிமை கோராத வாகனங்கள், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஏலம் விடப்படுகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல போலீஸ் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் புதர் மண்டி கிடக்கிறது. குறிப்பாக ஆயுதப்படை மைதானம் எதிரில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. ஆனால் அவை கிடப்பதே தெரியாத அளவுக்கு புதரால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனங்கள் மேற்கூரை இல்லாத திறந்த வெளியில் நிறுத்தப்படுவதால் வெயில், மழைக்காலங்களில் பழுதடைந்து சில வாரங்களில் துருப்பிடிக்கின்றன.

நடவடிக்கை

தினசரி அவ்வழியாக அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் செல்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இப்படி வாகனங்களை போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம், ஆனால் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.

எனவே குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாக்க மேற்கூரை அமைக்க வேண்டும் அல்லது வழக்குகளை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது ஏலத்திலோ விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்