பாதுகாப்பு கேட்டு இரு காதல் ஜோடிகள் தஞ்சம்

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு இரு காதல் ஜோடிகள் தஞ்சம்

Update: 2022-09-24 18:45 GMT

விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை சோமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 25). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அதன் உரிமையாளர் மகளான கோகிலா(20) என்பவருடன் அருணாச்சலத்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் அருணாச்சலம் பெங்களூரு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கோகிலா, அருணாச்சலத்துடன் நாமக்கல் நாமகிரிப்பேட்டையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் அங்கிருந்து விழுப்புரம் வந்தனர். கோகிலாவை போலீசார் மற்றும் உறவினர் தேடுவதை அறிந்து  விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இதேபோல் சீர்காழி பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (25). இவரும் உறவினர் மகளான சீர்காழி மாதானம் பகுதியை சேர்ந்த வித்யா(24) என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு வித்யாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டிலிருந்து வெளியேறி கடந்த 13-ந் தேதி வளவனூரில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் விழுப்புரம் மாதா கோவில் சந்திப்பில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். வித்யாவை அவரது குடும்பத்தினர் தேடுவதை அறிந்து வித்யாவும், புகழேந்தியும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். ஒரே நேரத்தில் இரு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததால் காதல் ஜோடிகளின் உறவினர்கள், வக்கீல்கள் என ஏராளமானவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்