கடலூரில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி; 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூரில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

Update: 2023-06-19 07:21 GMT

கடலூர்,

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பஸ் எதிரில் வந்தது. இதில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.

அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் டிரைவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். எதிரில் தாறுமாறாக வந்த பஸ் மோதாமல் இருக்க, சாலை ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டிச் சென்றார். இருந்தபோதும் முன் டயர் வெடித்து தாறுமாறாக வந்த பஸ், எதிரில் வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர்.

இதில் காயமடைந்த 80-க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பேருந்து ஓட்டுநர் அங்களாமணி, ஸ்ரீநிவாசன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறை வீரர்களை உதவிக்கு அழைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாலிபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணிகள் முடிந்த பிறகே, எத்தனை பேர் உயிரிழந்தனர். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக சொல்ல முடியும் என போலீசார் கூறினார்கள். பஸ் விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் பண்ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்