தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பலில் கிரேன் உடைந்து ஆபரேட்டர் பலி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பலில் கிரேன் உடைந்து ஆபரேட்டர் பலியானார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பலில் நிலக்கரி ஏற்றியபோது கிரேன் உடைந்து ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.
ஆபரேட்டர்
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்தவர் ராயப்பன். இவருடைய மகன் பாரத் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றி செல்வதற்காக 40 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கியானா என்ற கப்பல் வந்தது. 4-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு, நிலக்கரி ஏற்றும் பணி நடந்தது. இந்த கப்பலில் உள்ள கிரேன் மூலம் பாரத் நிலக்கரியை ஏற்றும் பணியில் ஈடுபட்டார்.
கிரேன் உடைந்து சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக கப்பலில் உள்ள கிரேன் உடைந்து விழுந்தது. அதில் இருந்த பாரத் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாரத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பாரத்துக்கு சுபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சாலை மறியல்
கிரேன் ஆபரேட்டர் பாரத்தின் இறப்புக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்கள் தூத்துக்குடி-தோமையார் காலனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரண உதவிகள் பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர்.