நெல்சேமிப்பு கிடங்கில் காத்து கிடக்கும் லாரிகள்
நெல்சேமிப்பு கிடங்கில் காத்து கிடக்கும் லாரிகள்;
ஆட்கள் பற்றாக்குறையால் லாரிகளில் நெல்லை இறக்க முடியாத அவலம் உள்ளதால் நெல்சேமிப்பு கிடங்கில் லாரிகள் காத்து கிடக்கின்றன. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டு்ம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல் சேமிப்பு கிடங்கு
வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த நெல் சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தினமும் 97 நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் நெல்சேமிப்பு கிடங்கிற்கு நெல்மூட்டைகள் கொண்டுவரப்படுகிறது.
காத்து கிடக்கும் லாரிகள்
இதனை இறக்கி அடுக்கி வைப்பதற்கு போதுமான பணியாளர்கள் நெல் சேமிப்பு கிடங்கில் இ்ல்லாத அவல நிலை உள்ளது. இதனால் சேமிப்பு கிடங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் கடந்த 3 நாட்களாக காத்து கிடக்கிறது. இதனால் லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக கூடுதலாக பணியாளர்களை நியமித்து லாரிகளில் உள்ள நெல்மூட்டைகளை இறக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் பணியாளர்கள்
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில்,
நாகை மாவட்டத்தில் இருந்து தினமும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் இங்கு நெல் கொண்டுவரப்படுகிறது. அதனை இங்கு இறக்கிவைத்து மீண்டும் வெளிமாநிலத்திற்கு ெரயில்வே வேகனுக்கும், மில் அரவை மில்லுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் ஒரு சில நாட்களில் லாரியில் இருந்து நெல்லை இறக்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் ஒரிரு நாட்களில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கபட்டு லாரிகள் தேக்கம் இல்லாமல் நெல் மூட்டை இறக்கப்படும் என்றனர்.