சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரிகள்
காஞ்சீபுரம் அருகே சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் நின்று கொண்டிருந்த லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 சரக்கு லாரிகளில் காற்றாலைக்கான இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சாலையோர பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக கவிழ்ந்தது.
அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.