இரட்டை அகலப்பாதையில் கோவில்பட்டி-கடம்பூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்- இன்று நடக்கிறது

இரட்டை அகலப்பாதையில் கோவில்பட்டி-கடம்பூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது

Update: 2023-01-10 20:51 GMT


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட கோவில்பட்டி-கடம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான 22 கி.மீ. இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த பாதையில், மின்மயமாக்கல் பணிகளும் முடிந்து மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன. இதற்கிடையே, தென்னக ரெயில்வேயின் தலைமை முதன்மை மின் என்ஜினீயர் ஏ.கே.சித்தார்த்தா இந்த பாதையில் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு கடம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரெயில்வே கேட்டுகள், கடம்பூர் துணை மின்நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அவருடன், முதன்மை மின் வினியோக பிரிவு என்ஜினீயர் சுந்தரேசன், மின்மயமாக்கல் பிரிவு பொதுமேலாளர் ராமநாதன், ஆர்.வி.என்.ல். முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மின்மயமாக்கல் பிரிவு என்ஜினீயர் பச்சுரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல, கோவில்பட்டி-கடம்பூர் இரட்டை அகலப்பாதையை தென்சரகத்துக்கான ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.கே.ராய் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். இதற்காக காலை 9 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வு கடம்பூர் ரெயில் நிலையத்தில் மதியம் 1.30 மணிக்கு முடியும் என தெரிகிறது. பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் வரை அதிவேக ரெயில்சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. எனவே, மேற்கண்ட நேரங்களில் அந்த பாதையின் அருகே குடியிருப்பவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தண்டவாள பகுதியை கடந்து செல்லவோ, தண்டவாள பகுதிக்கு அருகில் செல்லவோ வேண்டாம் என மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்