நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2023-04-25 18:45 GMT

ஊட்டி, 

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கோடை சீசன்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடவும், கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாகவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

கடந்தாண்டு கோடை சீசனில் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்தநிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வருகிற 19-ந் தேதி முதல் தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் ஊட்டிக்கு வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி நகர் உள்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று (புதன்கிழமை) முதல் ஊட்டியில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும். அதேபோல் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டி நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் வழியாக ஊட்டிக்கு வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அரசு பஸ்களை தவிர கனரக வாகனங்களான தண்ணீர் லாரி, கட்டுமானப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகர்ப்புற சாலைகளில் இயங்க அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. கூட்டத்தில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கருப்புசாமி, ஷிப்லா மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்