லாரியில் கருங்காலி மரக்கட்டைகள் கடத்தல்:டிரைவர் கைது

லாரியில் கருங்காலி மரக்கட்டைகளை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-08 18:45 GMT

வருசநாடு அருகே தும்மக்குண்டு பகுதியில் இருந்து கருங்காலி மரக்கட்டைகளை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை வருசநாடு வனத்துறையினர் தும்மக்குண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் வருசநாடு அருகே கோமாளிகுடுசு பகுதியில் நின்று வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

அப்போது தும்மக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு நோக்கி வந்த லாரியை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அதிகாரிகளை கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை விரட்டி சென்றனர். வருசநாடு அருகே லாரியை மடக்கிய வனத்துறையினர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 48) என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் சோதனை செய்தபோது 24 கருங்காலி கட்டைகள் இருந்தது.

அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக தேனி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யார் மூலம் பெறப்பட்டது என்பது குறித்து பாலமுருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்