காட்பாடி வரை மட்டுமே இயக்கப்பட்ட ரெயில்கள்

பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டதால் சென்னை செல்ல பயணிகள் அவதிபட்டனர்.

Update: 2022-05-25 12:34 GMT

காட்பாடி

பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டதால் சென்னை செல்ல பயணிகள் அவதிபட்டனர்.

ரெயில்வே பராமரிப்பு பணி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக ரெயில்வே துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் பகுதி வாரியாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கனரக தொழில்நுட்ப எந்திரங்களை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் சென்னை செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

பயணிகள் அவதி

கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு - சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன.

இதனால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர். சென்னை செல்வதற்காக இந்த ரெயில்களில் வந்த பயணிகளுக்காக காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் உடைமைகளுடன் ரெயிலில் வசதியாக வந்த பயணிகள் காட்பாடியில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறைந்த அளவே பஸ்கள் இயக்கம்

3 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் சில பயணிகள் காட்பாடியில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் சென்றனர்.

சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல வருகிற 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந் தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அப்போதும் கோவை இன்டர்சிட்டி, லால்பாக், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்