தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

தென்னை விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-04-21 19:19 GMT


தென்னை விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். தென்னை விவசாயிகள் விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படும் நிலையில் தென்னை விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்து உரிய பயிற்சி அளிக்க பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.

தென்னை விவசாயிகள் குழு அமைத்து தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி விஜய் முருகன் வலியுறுத்தினார். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பயிர் சேதம்

நரிக்குடி பகுதியில் போதிய மழை இல்லாததால் நெற் பயிர் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் அதிகரிக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரியுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தவுடன் பயிர்சேதத்திற்கு இழப்பீடு வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. பாறைப்பட்டி கிராமத்திலும், புலியூரான் கிராமத்திலும் கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன் கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்