வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி

சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

Update: 2023-01-03 18:45 GMT

சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

வேலுநாச்சியார் பிறந்தநாள்

சிவகங்கையை ஆண்ட ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள்விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கை-பையூர்பிள்ளை வயலில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) மற்றும் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, நகரசபை தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார் கண்ணன், யூனியன் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் வளாகத்திலுள்ள குயிலியின் நினைவு சின்னத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்

கொரோனா நிவாரண தொகை

இதையடுத்து அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை. வழக்கம்போல் அந்தந்த ரேஷன் கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் 12 கோடி கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 2.19 கோடி கரும்புகள் பொங்கல் பரிசாக வழங்க விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கவில்லை. கொரோனா நிவாரண தொகையை ரூ.5 ஆயிரம் வழங்க கோரிக்கை விடுத்தோம். அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்களுக்கான பயிற்சி பள்ளி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் அதுகுறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துரைப்போம்.

சீர்செய்யப்படும்

ரேஷன்கடைகள் புதுப்பிக்கப்பட்டு சுத்தமான முறையில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு நவீனப்படுத்தப்படும். தமிழகம் முழுவதுமுள்ள 4500 கூட்டுறவு தொடக்க கடன் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில் 2000 ஆயிரம் கூட்டுறவு கடன் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. மற்ற கடன் சங்கங்களிலிருந்து கிடைக்கப்பெரும் வருமானத்தை வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படிப்படியாக அனைத்து கடன் சங்கங்களும் சீர் செய்யப்படும். தமிழகத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவை அனைத்தும் லாபத்துடன் செயல்படுகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்