ஆவடியில் 768 காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-ம் பட்டாலியன், 2-ம் பட்டாலியன், 3-ம் பட்டாலியன் மற்றும் போலீஸ் படை பயிற்சி மையம் ஆகிய 4 இடங்களில் பயிற்சி பெற்ற காவலர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது.
ஆவடி,
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-ம் பட்டாலியன், 2-ம் பட்டாலியன், 3-ம் பட்டாலியன் மற்றும் போலீஸ் படை பயிற்சி மையம் ஆகிய 4 இடங்களில் பயிற்சி பெற்ற காவலர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் 5-ம் பட்டாலியனில் 247 காவலர்களும், 3-ம் பட்டாலியனில் 247 காவலர்களும், 2-ம் பட்டாலியனில் 138 காவலர்களும், போலீஸ் படை பயிற்சி மையத்தில் 136 காவலர்கள் என மொத்தம் 768 காவலர்கள் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் 5-ம் பட்டாலியனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பயிற்சி நிறைவு செய்த காவலர்களுக்கு பரிசு மற்றும் கேடகத்தை வழங்கி பாராட்டினார்.
அதேபோல் போலீஸ் படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பயிற்சி நிறைவு செய்த காவலர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
3-ம் பட்டாலினில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல் அக்தரும், 2-ம் பட்டாலியனில் ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவியும் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினர்.