பொதுமக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு: ஈரோடு வந்த 'வந்தே பாரத்' ரெயில்

ஈரோடு வந்த ‘வந்தே பாரத்’ ரெயிலை பொதுமக்கள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

Update: 2023-04-08 21:48 GMT

ஈரோடு வந்த 'வந்தே பாரத்' ரெயிலை பொதுமக்கள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

வந்தே பாரத் ரெயில்

இந்திய ெரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ெரயில்வே அமைச்சகம் எடுத்து வருகிறது. அதன்படி, அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ெரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை -மைசூரு இடையில் 5-வது வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டது.

இந்த நிலையில் 12-வது வந்தே பாரத் ரெயிலாகவும், தமிழகத்தில் 2-வது ரெயிலாகவும், சென்னை -கோவை இடையில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இது ஆகும். இந்த புதிய சேவையை சென்னை சென்ட்ரலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 4.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்று இரவு 9.30 மணிக்கு ஈரோடு வந்தது. அப்போது பாரதீய ஜனதா கட்சியினரும், பொதுமக்களும் வந்தே பாரத் ரெயிலுக்கு பூசணிக்காய் சுற்றியும், பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வந்தே பாரத் ரெயிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் பயணம் செய்தார். பின்னர் இங்கிருந்து 9.36 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் வழியாக கோவைக்கு சென்றது.

536 சொகுசான இருக்கைகள்

8 பெட்டிகளில் 536 சொகுசான இருக்கைகள் கொண்ட இந்த ரெயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. வாரத்திற்கு 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

புதன்கிழமை இந்த ரெயில் சேவை இருக்காது. மற்ற நாட்களில் வந்தே பாரத் ரெயில் (எண்: 20644) காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 6.35 மணிக்கு திருப்பூர் வரும்.

பின்னர் அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு, 7.12 மணிக்கு ஈரோடு வரும். இதைத்தொடர்ந்து இங்கிருந்து 7.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் 7.58 மணிக்கு சேலம் சென்றடையும். அங்கிருந்து 8 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.50 மணிக்கு சென்னையை சென்றடையும்.

பயண நேரம்

இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் (எண்: 20643) மதியம் 2.25 மணிக்கு புறப்படுகிறது. மாலை 5.48 மணிக்கு சேலம் வரும் இந்த ரெயில் அங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு 6.32 மணிக்கு ஈரோடு வருகிறது. இங்கிருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 7.13 மணிக்கு சென்று, அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை சென்றடையும். வந்தே பாரத் ரெயில் மூலம் கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் 5.50 மணி நேர பயணத்தில் சென்றடையலாம்.

Tags:    

மேலும் செய்திகள்