ெரயில்வே சரக்கு முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த ஆலோசனை கூட்டம்

ெரயில்வே சரக்கு முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2022-10-19 02:58 IST

சென்னிமலை

ெரயில்வே சரக்கு முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சரக்கு முனையம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈங்கூர் - விஜயமங்கலம் ெரயில் நிலையங்களுக்கு இடையே துலுக்கம்பாளையம் பகுதியில் ெரயில்வே துறையின் "கதி சக்தி மல்டி மாடல் கார்கோ டெர்மினல் திட்டத்தின்" கீழ் தனியார் சரக்கு முனையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்காக பனியம்பள்ளி மற்றும் வாய்ப்பாடி ஊராட்சியில் சுமார் 30.50 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை விவசாயிகளிடம் இருந்து 1997-ம் ஆண்டின் தொழிலியல் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலம் எடுப்பு செய்ய அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அங்கு சரக்கு முனையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் சமீபத்தில் இது குறித்த பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த 11-ந் தேதி பெருந்துறையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சரக்கு முனையம் அமைப்பதற்கு நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட முடிவு

இந்த நிலையில் ெரயில்வே சரக்கு முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் சென்னிமலை அருகே துலுக்கம்பாளையம் கிராமத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் பி.சிவகுமார் தலைமை தாங்கினார்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ்.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது இந்த கூட்டத்தில், நிலக்கரி உள்ளிட்ட மாசுபடுத்தும் பொருட்களை சரக்கு முனையத்தில் அனுமதிக்க கூடாது என்றும், இதற்காக பாதிக்கப்படும் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதே சமயம் விஜயமங்கலம் ெரயில் நிலையம் அருகே வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே துறைக்கு சொந்தமான சுமார் 70 ஏக்கர் நிலத்தில் அரசு சார்பில் சரக்கு டெர்மினல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆனால் அதில் நிலக்கரி உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களை ஏற்றி, இறக்க அனுமதிக்க கூடாது என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தனியார் சரக்கு டெர்மினல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் மக்கள் நல சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்