கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண் பக்தர்கள் பலி

கோவிலுக்கு சென்று திரும்பியபோது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-12-13 23:56 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் கோவிலுக்கு செல்லும்போது கெதறல்லா ஆற்றை தரைப்பாலம் வழியாக கடந்து சென்றனர்.அப்போது அந்த ஆற்றில்தண்ணீர் குறைவாக சென்றுகொண்டு இருந்தது. தொடர்ந்து மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பக்தர்கள் கோவிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஜக்கலொரை, கவரட்டி பகுதியை சேர்ந்த சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய 4 பெண்கள் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தபடி தரைப்பாலம் வழியாக ஆற்றை கடக்க முயன்றனர்.

3 பெண்கள் பலி

திடீரென அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் 4 பெண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து 4 பேரையும் தேடினர். இரவு 11 மணியாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீட்பு பணி நிறுத்தப்பட்டு நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது.

அப்போது சரோஜா, வாசுகி, விமலா ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். சுசீலாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆற்றை கடந்து வர முடியாமல் தவித்த 200 பக்தர்களை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

கோவிலுக்கு சென்று திரும்பிய 3 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்