ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.;
ஏற்காடு:-
ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
பலத்த மழை
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 நாட்களாக இரவு, பகலாக போராடி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
காட்டாற்று வெள்ளம்
இதனிடையே மாலை 6 மணிக்கு மீண்டும் பலத்த மழை ெபய்தது. இதன் காரணமாக மீண்டும் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள சாளா முனியப்பன் கோவிலையொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள பாறைகளுக்கு இடையேயும் அருவி போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை நின்றவுடன் மலைப்பாதையில் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாததால் மீண்டும் நேற்று காலை முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. எனினும் ஆங்காங்கே மலைப்பாதையோரங்களில் கற்கள், மண் ஆகியவை கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் ெநடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் பலத்த மழையால் 60 அடி பாலம் உள்பட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.