கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்து நெரிசல்

கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-19 18:48 GMT

ஜவகர் பஜார்

கரூர் மாநகரின் முக்கியமான பகுதியாக ஜவகர்பஜார் உள்ளது. இந்த பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பேன்சி ஸ்டோர், ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இதனால் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பொதுமக்கள் அதிக அளவில் வந்து பொருட்களை வாங்கி செல்லும் முக்கிய பகுதியாக இருக்கிறது. மேலும் ஜவகர்பஜாரில் தீபாவளி, பொங்கல் மற்றும் திருவிழா காலங்களில் ஜவுளி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்துவிடுவார்கள்.ஜவகர்பஜார் பகுதியில் அன்றைய காலக்கட்டத்தின் அடிப்படையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை, வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. தற்போது நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு அதிகளவில் ஏற்படுகிறது.

பார்க்கிங் வசதி

எனவே ஜவகர்பஜார் வரும் பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அடுத்த மாதம் 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திரளான பொதுமக்கள் ஜவகர்பஜார் கடைவீதியில் ஜவுளிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவில் வருவார்கள். எனவே தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து அதிகம்

இதேபோல் கரூர் மாநகரின் முக்கிய சாலையாக கோவை சாலை உள்ளது. கரூரை பொறுத்தவரை கோவை சாலை பகுதி அதிகளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த சாலையில் மனோகரா கார்னர் முதல் திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை ஏராளமான வணிக நிறுவனங்கள், வங்கிகள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோவை சாலையில் சென்று வருவதால் கோவை சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கடைகள் முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றன.

கண்டு கொள்ளாதமாநகராட்சி

மேலும், மாலை நேரங்களில் கடைகளின் முன்பு உள்ள சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும், கடைகள், நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வரும் சரக்கு வாகனங்களையும் சாலையில் நிறுத்தி பொருட்களை இறக்குவதாலும் கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.ஆனால் கரூர் மாநகராட்சி நிர்வாகம் அதனை கண்டு கொள்ளாமல் உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் கரூர் -கோவை சாலையில் பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்