நெல்லை சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு இரவில் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை சந்திப்பு பகுதியில் நடைபெறுகின்ற பாதாள சாக்கடை திட்டப்பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இரவில் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-07-04 21:58 GMT

நெல்லை சந்திப்பு பகுதியில் நடைபெறுகின்ற பாதாள சாக்கடை திட்டப்பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இரவில் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடை

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இந்தப் பணிகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் மதுரை ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணி பெரும்பாலும் இரவு நேரங்களில் நடந்து வந்தது.

நெல்லை சந்திப்பில் மதுரை ரோட்டில் 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் பணிகள் நடந்து வந்தது. வாகனங்கள் மதுரை ரோட்டில் நேராக சென்று வந்தன. இந்தநிலையில் நேற்று பிற்பகல் சிந்துபூந்துறைக்கு திரும்பும் பகுதியில் மதுரை மெயின்ரோட்டில் திட்டப்பணிகள் நடைபெற தொடங்கின. எனவே வாகனங்கள் மதுரை ரோட்டில் செல்ல முடியாமல் சிந்துபூந்துறை வழியாக சுற்றி சென்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் நெல்லை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பணியில் ஈடுபட்டவர்கள் `இங்கு பணி நடக்கிறது' என்பது குறித்து தகவல் பலகை வைக்காததால் நெல்லை உடையார்பட்டி, பாலபாக்யா நகர், சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த சாலையில் வந்து விட்டனர். பின்னர் பணி நடப்பதை அறிந்து திரும்பி சென்று சிந்துபூந்துறை வழியாக வந்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெறுகின்ற இடங்களில் பணி நடைபெறுகிறது, வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் இந்த பணிகளை இரவில் செய்ய வேண்டும், என்று கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்