சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை
வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 12 சதவீத மழை குறைவாக பெய்து உள்ளது.
இதையடுத்து தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. அக்டோபர் மாதம் 1-ந் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்ய வேண்டிய சூழலில் கடந்த 5 நாட்களாக வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது.
திடீர் மழை
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் சந்தை நாளான நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை திடீரென கனமழை கொட்டியது.
கடந்த வாரம் முழுவதும் மழையே இல்லாத நிலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று திடீரென கனமழை பெய்ததால் சந்தைக்கு வந்த பொதுமக்கள், தொழிலாளர்கள் குடைகளை கூட பிடித்தபடி நடந்து சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
மேலும் வால்பாறை பகுதியில் கடுமையான வெயிலும், இரவில் லேசான குளிரும் கலந்த இதமான காலநிலை நிலவி வந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள் எதிர்பாராமல் திடீரென பெய்த கனமழை காரணமாக திரும்பி சென்றனர். இதனால் வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த மழை காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதோடு, தேயிலை செடிகள் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.