சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தக்கூடாது

சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தக்கூடாது என விக்கிரமராஜா கூறினார்.

Update: 2023-08-14 19:46 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையத்தில் நடைபெற்ற தொழில் வர்த்தக சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து கடைகளுக்கும் சென்று சோதனை என்ற பெயரில் ஆய்வு செய்கின்றனர். அப்போது ஒரு சில இடங்களில் வியாபாரிகளை அச்சுறுத்துவதாக தகவல்கள் வருகின்றன. இதனை தவிர்க்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் அவ்வப்போது பல்வேறு சட்டங்களை இயற்றி வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நெருக்கடி தன்மையை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பேக்கிங் கவருக்கு மாற்றுப்பொருளை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். 27 ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் கவர்களை அரசுதான் எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. பிளாஸ்டிக் கவருக்கு மாற்று பொருள் கண்டுபிடிக்கும் வரை வியாபாரிகளிடம் நெருக்கடி காட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

உள்ளாட்சி, நகராட்சி கடை வாடகை பிரச்சினைகளை சரி செய்ய தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் காய்கறி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. கட்டிடங்கள் கட்டப்பட்ட பின் அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகள் தடுமாறி வருகின்றனர். வியாபாரிகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தி கடை ஒதுக்கி நியாயமான வாடகையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்