வியாபாரிகள் காய் கறிகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்

திருப்பத்தூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் காய் கறிகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-09-22 14:05 GMT

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் கண்ணகி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன், துணை இயக்குனர்கள் பச்சையப்பன், தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கடன் வழங்க தாமதம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எங்களுக்கு கடன் வழங்க மிகவும் காலதாமதம் செய்கின்றனர். ஆனால் தனியார் வங்கிகள் கடன் கொடுக்க போட்டி போட்டு வருகின்றன. கொப்பரை தேங்காய்கள் எங்களிடம் டன் கணக்கில் உள்ளது. அதை விற்பனை செய்ய கொண்டு சென்றால் கொள்முதல் அளவு முடிந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே எங்களுக்கு எண்ணெய் ஆட்டும் எந்திரமாவது வாங்கி கொடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளது. இதில் பல இடங்களில் கருந்தலை புழுக்கள் அதிகமாக உள்ளது. இந்த புழுக்கள் காற்றில் பறந்து சென்று மரங்களையும் சேதப்படுத்துகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

தடுக்க வேண்டும்

திருப்பத்தூர் உழவர் சந்தையில் அதிக அளவு வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே வியாபாரிகள் உழவர் சந்தையில் காய் கறிகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளிடம் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். மேலும் சில கூட்டுறவு சங்கங்களில் செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பதிலளித்து பேசியதாவது:-

நடவடிக்கை

விவசாயிகளுக்கு எந்த வங்கி கடன் தருகிறதோ, அங்கு சென்று கடனை வாங்கிக் கொள்ளுங்கள். கருந்தலை புழுக்களை அழிக்க புரக்னாயிட் என்ற பூச்சி இனம் உள்ளது. இந்த பூச்சிகளை தென்னை மரங்களில் விட்டால் முட்டையிட்டு அதிலிருந்து வரும் புழுக்கள் கருந்தலை புழுக்களை அழித்துவிடும். அவை தற்போது வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போது மழை காலம் என்பதனால் பூச்சிகள் இறந்துவிடும். வெயில் அடிக்கும்போது இவை தென்னை மரங்களில் விடப்படும். இந்த பூச்சிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் விற்பனை செய்யப்படும்.

உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்து தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் சந்தையில் 6 சுய உதவிக்குழுக்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார். கூட்டத்தில் விவசாயிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தொடங்கியபோது, பல அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் கோபமடைந்து ஆவேசமாக பேசினர். மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் குறைத்தீர்வு கூட்டத்திற்கு அனைத்து துறைகளை சேர்ந்த தலைமை அதிகாரிகள் வர வேண்டும். வராமல் உள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அரசு அலுவலகங்களையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைத்து, அதற்கு தேவையான அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்