கடைகளை அடைத்து வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டம்

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே உள்ள வியாபாரிகள் கடைகளை அடைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-14 18:45 GMT

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே உள்ள வியாபாரிகள் கடைகளை அடைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

மனித சங்கிலி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் தென் பகுதியில் உண்ணாமலை அம்மன் நிலையம் மற்றும் தென் ஒத்தவாடைதெரு பகுதியில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் நேற்று திடீரென தங்கள் கடைகளை அடைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அண்ணாமலையார் ஆலய கடை கட்டிட வாடகைதாரர்கள் சங்க தலைவர் சம்பத்குமார், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பி.கே. ராஜ் ஆகியோர் தலைமையில் அனைவரும் கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வாழ்வாதாரம் பாதிப்பு

நாங்கள் பல ஆண்டுகளாக கோவில் அருகே கடைகள் வைத்து வாழ்ந்து வருகிறோம். நாங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பூஜை பொருட்களான மஞ்சள், குங்குமம், தாலிசரடு, வளையல், விளக்குகள், சாமி படங்கள், சிலைகள் மற்றும் தின்பண்டங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில் வருகிற கார்த்திகை மாத தீபத்திருவிழாவை முன்னிட்டு எங்கள் கடைகள் முன்பு பேரிகார்டுகள் வைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிப்பு அடைகிறது.

தீபத்திருவிழாவை நம்பி ஏராளமான வியாபாரிகள் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில் பேரிகாடுகள் வைத்துள்ளது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இதேபோன்று பேரிகார்டுகள் வைக்கப்படுகிறது. ஆனால் தீபத் திருவிழாவை முன்னிட்டு பல நாட்களுக்கு முன்பே பேரிகாடுகள் வைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்