தொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு

நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் தொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-04 18:44 GMT

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை, கந்தம்பாளையம், கொங்குநகர், குறுக்குப்பாளையம், மூலியமங்கலம், பழமாபுரம், குட்டக்கடை, புன்னம், புன்னம்சத்திரம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, கட்டிப்பாளையம், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்புப்பாளையம், முத்தனூர், சேமங்கி, புங்கோடை, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், குந்தாணிப்பாளையம், ஓலப்பாளையம், ஓரம்புப்பாளையம், நல்லிக்கோவில், மரவாப்பாளையம், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், உப்புபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்து கொண்டிருந்தது. மேலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்து வருகின்றனர்.

வியாபாரிகள் பாதிப்பு

அதேபோல் இருசக்கர வாகனங்களில் சாலையில் செல்பவர்களும், நடந்து சென்ற கூலி தொழிலாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாமல் திடீரென கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.

விவசாயிகளும் தங்களின் விளை நிலங்களில் கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் குறையாத நிலையில் மீண்டும் கனமழை பெய்து கொண்டிருந்ததால் பல்வேறு வகையான பண பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கார்கள், வேன்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் சாலையில் செல்லும்போது வாகனத்தின் விளக்கை எரிய விட்டு சென்றனர்.

சேற்றில் சிக்கிய லாரி

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சாலையில் இருபுறமும் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சாலையோரம் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் சாலையோரம் செல்லும்போது பள்ளத்தில் இறங்கினால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் மீது சேறும், சகதியுமான நீர் தெளிக்கிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி ஒன்று, எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்றபோது சாலையோரம் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் லாரி டிரைவர் மிகவும் அவதிப்பட்டார்.

வேலாயுதம்பாளையம்

இதேபோல் வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்குப்பாளையம், மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று 3-வது நாளாக தொடர்ச்சியாக பகல் 12 மணி முதல் மதியம் 3 வரை மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழை காரணமாக ஆண்டாங்கோவில் தடுப்பணையில் நேற்று மழைநீர் வழிந்தோடியது.

மழை அளவு

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-2.4, க.பரமத்தி-1.4, குளித்தலை-2, தோகைமலை-4, கிருஷ்ணராயபுரம்-1, பஞ்சப்பட்டி-18.4, கடவூர்-22, பாலவிடுதி-18.1, மைலம்பட்டி-32. மொத்தம்-101.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்