வைகை அணை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் வியாபாரி பலி

வைகை அணை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் வியாபாரி பலியானார்.

Update: 2023-06-17 21:00 GMT

வைகை அணை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் வியாபாரி பலியானார்.

வேன் கவிழ்ந்தது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரன் (வயது 35). இவருடைய மாமனார் ரவி (48). இவர்கள் 2 பேரும் வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் வெள்ளைப்பூண்டு வாங்குவதற்காக சரக்கு வேனில் தேனி மாவட்டத்திற்கு வந்தனர். அந்த சரக்கு வேனை பல்லடத்தை சேர்ந்த டிரைவரான சதீஷ் (27) என்பவர் ஓட்டினார். ரவி வேனின் பின்புறம் அமர்ந்து வந்தார். நாகேஸ்வரன் முன்னால் அமர்ந்திருந்தார்.

ஆண்டிப்பட்டியை அடுத்த வைகை அணை அருகே க.விலக்கு நோக்கி செல்லும் மேல்மங்கலம்-வைகை அணை சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் வேன் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

வியாபாரி பலி

இந்த விபத்தில் வேனில் இருந்து தூக்கிவீசப்பட்ட ரவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ், நாகேஸ்வரன் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்