மேட்டூர்:=
கோடை விடுமுறையால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பூலாம்பட்டியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேட்டூர் பூங்கா
சுற்றுலா தலமான மேட்டூருக்கு ஞாயிற்றுக்கிழமை உள்பட அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மேட்டூர் பூங்காவிற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
தற்போது கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு தங்கள் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
காவிரியில் குளித்தனர்
இவர்களில் ஒரு சிலர் கொளுத்தும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மேட்டூர் அணைக்கட்டு பூங்கா அருகே உள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர். அடுத்து முனியப்பன் கோவிலுக்கு சென்று முனியப்ப சாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து பூங்காவிற்கு சென்று தாங்கள் எடுத்து வந்த உணவினை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். சிறுவர் சிறுமிகள் விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுதை கழித்தனர்.
பவள விழா கோபுரம்
கோடை விடுமுறை முடியும் தருவாயை எட்டி உள்ளதால் நேற்று பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. இதனால் கீழ் பூங்கா, மேல் பூங்கா உள்பட பூங்கா வளாகத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காட்சி அளித்தது. மேட்டூர் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளில் ஒரு சிலர் மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் அமைந்துள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்று அணையின் முழுமையான தோற்றத்தை கண்டு ரசித்தனர்.
மீன் வருவல்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் பூங்கா வாசலில் அமைந்துள்ள மீன் வறுவல் கடைகளிலும், சிறிய ஓட்டல்களிலும் விற்பனை சூடு பிடித்தது.
சுற்றுலா பயணிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும் மேட்டூருக்கு வந்தனர். இதனால் இலகுரக வாகனங்கள் செல்லும் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி மேட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூலாம்பட்டி
சேலம் மாவட்ட மேற்கு எல்லையான பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 20 நாட்களாக கதவணையின் பராமரிப்பு பணிக்காக அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் பூலாம்பட்டி கதவணையில் தண்ணீர் நிரப்பப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது.
சேலம் மாவட்ட பகுதியான பூலாம்பட்டி மற்றும் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியினை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. பரந்து விரிந்த அணை பரப்பில் சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேக விசைப்படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
படகு சவாரி செய்து உற்சாகம்
இந்நிலையில் கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில் உள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள், அங்குள்ள நீர் மின் நிலையம், நீரேற்று நிலையம், நீருந்து நிலையம், படகுதுறை, பரிசல் துறை, அணைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கதவணை பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக இருந்தனர்.
பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிக்கரை கைலாசநாதர் கோவில், காவிரித்தாய் சன்னதி, படித்துறை அருகே பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். பூலாம்பட்டி பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.