ஆழியாறு தடுப்பணையில் ஆபத்ைத உணராமல் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு தடுப்பணையில் ஆபத்தை உணராமல் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-22 18:45 GMT

ஆனைமலை

ஆழியாறு தடுப்பணையில் ஆபத்தை உணராமல் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆழியாறு தடுப்பணை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அழியாறு அணை உள்ளது. இந்த அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் ஆழியாறு தடுப்பணையிலும் குளித்து சென்று வந்தனர்.

இந்த நிலையில் தடுப்பணை பகுதியில் சுழல் மற்றும் புதை மணல் பகுதி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறியாத சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது சுழல், புதை மணல், பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.

இதையடுத்து ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், தடுப்பணைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, பேரூராட்சி மற்றும் போலீசார் சார்பில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. பண்டிகை மற்றும் விழா காலங்களில் ஆழியாறு தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தடையை மீறி குளியல்

இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதாலும், கடுமையான வெயில் வாட்டி வருவதாலும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால் ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகள், தடுப்பணையில் தடையை மீறி குளியல் போட்டு வருகின்றனர். தடுப்பணையில சுழல், புதைமணல் உள்ளிட்ட ஆபத்துகள் இருந்தும் அதனை உணராமல் தடுப்பணை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஜாலியாக ஆட்டம் போட்டு வருகின்றனர். இவர்களின் இந்த அலட்சியத்தால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தடையை மீறி குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் நடவடிக்கை தேவை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆழியாறு தடுப்பணையில் சுழலில் சிக்கியும், புதை மணலில் புதைந்தும் பலர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 10-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவன் லோகசுதன் தடுப்பணையில் மூழ்கி இறந்தான். அதன் பின்னர் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 3 நாட்கள் மட்டுமே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

இதனால் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ஆழியாறு தடுப்பணைக்கு ஏராளனமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால், சுற்றுலா பயணிகள் தடையை மீறி தடுப்பணையில் குளிக்கின்றனர். ஆபத்தை உணராமல் அவர்கள் குளியல் போடுவதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆழியாறு தடுப்பணையில் பகுதியில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி அல்லது பொதுப்பணித்துறை சார்பாக காவலர்களை நியமித்து, தடையை மீறி குளிப்பவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்