கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையைெயாட்டி நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

Update: 2022-06-19 16:15 GMT

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது நிலவி வரும் குளுகுளு சீசன் நிறைவடையும் நிலை உள்ளது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். ஒரேநேரத்தில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கொடைக்கானல் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

படகு சவாரி

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் களைக்கட்டின. இதேபோல் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நகரை ஒட்டியுள்ள பாம்பார் அருவி, பியர் சோழா அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டகானல் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் நகரின் மைய பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானலில்  விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்