கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

வாரவிடுமுறையையொட்டி நேற்று கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

Update: 2023-08-13 18:45 GMT

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அருவிக்கு நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது கோடை காலத்தை போன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை தருகின்றனர். அதன்படி வாரவிடுமுறையான நேற்று அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாய் குளித்து ஆனந்தம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்