வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-06-05 12:35 GMT

திண்டுக்கல்,

கோடைக்காலம் தொடங்கியது முதல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நிலவி வரும் இதமான வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினரோடு வருகை தருகின்றனர்.

வார நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த நிலையில், இன்று வார விடுமுறையை கொண்டாடுவதற்காக மீண்டும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இயற்கை காட்சிகளை காண்பதற்காக செல்லக்கூடிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அங்குள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரயண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, முயல் சதுக்கம், பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தளங்களின் இயற்கை அழகினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி செய்வதற்கும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்