கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-09-24 05:22 GMT

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 நாள் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர்மண்டபத்தை பார்வையிட்டுவந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்