நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்தது.
இதன் காரணமாக மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் மணிமுத்தாறு அருவியில் இரு நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது மழை இல்லாததால், அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.