இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக மாறுவது எப்போது?

எலச்சிபாளையம் அருகே உள்ள இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுவது எப்போது? என்கிற எதிர்பார்ப்பில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.

Update: 2022-12-31 18:45 GMT

எலச்சிபாளையம்

இலுப்புலி ஏரி

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்புலி கிராமத்தில் 182 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து திருமணிமுத்தாறு வாய்க்காலில் மழைக்காலங்களில் வரக்கூடிய தண்ணீர் ஆட்டையாம்பட்டி வழியாக மல்லசமுத்திரம், மதியம்பட்டி, பருத்திப்பள்ளி, கொன்னையார், அகரம், எலச்சிபாளையம், பள்ளக்காடு வழியாக இலுப்புலி ஏரியில் சங்கமித்து 182 ஏக்கர் நிலத்தில் தேங்கி, பின்னர் மாணிக்கம்பாளையம், கூத்தம்பூண்டி வழியாக பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் சென்று அடைகிறது.

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிக பரப்பளவு கொண்ட ஏரி இலுப்புலி ஏரியாகும். இந்த ஏரி மிகவும் பழமை வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரியை ஊராட்சி நிர்வாகத்தினர் ஆழப்படுத்தி, அகலப்படுத்தி தண்ணீர் கூடுதலாக தேங்குவதற்கான சூழலை உருவாக்கி உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக மழை அளவு கூடுதலாக இருப்பதால், இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த ஏரியின் எல்லைபுரத்தில் உள்ள சிறிய அணையில், குடும்பத்துடன் வந்து குளிப்பது, இயற்கையை ரசித்து செல்வது என இருந்து வருகின்றனர். இந்த ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விளையாட்டு உபகரணங்களுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுற்றுலா தலம்

இதற்கிடையே இது குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்ட மன்றத்தில் இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பேசினார். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் மதிவேந்தன் நேரில் வந்து பார்வையிட்டு, இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக எப்போது மாறும் என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பழமையான ஏரிகள்

இது குறித்து இலுப்புலி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லோகநாதன் கூறியதாவது:-

ராசிபுரம் மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவிலும், நாமக்கல் மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவிலும் என மத்தியில் அமைந்துள்ள பகுதி இலுப்புலி கிராமம் ஆகும். இங்கு சீர்காழி நாதர் கோவில், ஈஸ்வரன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஓம் காளி அம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், காளியம்மன் கோவில், அண்ணமார் கோவில், ராக்கி அண்ணன் கோவில் என பழமையான கோவில்கள் அதிக அளவில் உள்ளன.

இந்த ஏரியில் தொடர்ந்து பல மாதங்கள் மழைநீர் வற்றாமல் இருக்கும் என்பதாலும், சுற்று வட்டார பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சமாக சுற்றுலா தலம் இல்லை என்பதாலும் விரைவாக இலுப்புலி ஏரி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மாற்றினால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வார்கள்.

பொருளாதாரம் மேம்படும்

காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு மாநில துணைத் தலைவர் தங்கராஜ்:

எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம், கிளாப்பாளையம், கூத்தம்பூண்டி, புஞ்சை புதுப்பாளையம், புல்லாகவுண்டம்பட்டி, அகரம் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை மையப்படுத்தி இருக்கின்ற பகுதி இலுப்புலி ஆகும். இங்குள்ள ஏரியில் நீர் தேங்கும்போதெல்லாம் சுற்று வட்டார பகுதி மக்கள் வந்து பார்த்து செல்வார்கள். சிலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு சந்தோஷமாக செல்வதும் உண்டு.

எனவே இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்தால் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவியாக இருக்கும்.

வேலைவாய்ப்பு பெருகும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்:

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அமைச்சர் மதிவேந்தன் நேரில் வந்து பார்வையிட்டு விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வாக்குறுதி அளித்து உள்ளார். ஆனால் இதுவரை இந்த ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படாமல் வெறும் வாக்குறுதியாகவே இருந்து வருகிறது.

எனவே அரசு உடனடியாக இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் அளித்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். அவ்வாறு செய்தால் வேலைவாய்ப்பு பெருகும்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கிளாப்பாளையம் விவசாயி மோகன்:-

இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்றினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் கோடை காலத்தில் மாணவர்கள் இந்த சுற்றுலா தலத்திற்கு குடும்பத்துடன் சந்தோஷமாக வந்து செல்ல முடியும். இப்பகுதி மாவட்டத்தில் பிரபலமான பகுதியாக மாறுவதற்கான சூழல் உருவாகும். எனவே உடனடியாக சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்