சுற்றுலா தலங்களை பொலிவுபடுத்த வேண்டும்

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க சுற்றுலா தலங்களை பொலிவுபடுத்த வேண்டும் என்று வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-02-23 18:45 GMT

வால்பாறை

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க சுற்றுலா தலங்களை பொலிவுபடுத்த வேண்டும் என்று வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சுற்றுலா தலங்கள்

வால்பாறை பகுதியில் நீரார் அணை, சோலையாறு அணை, நல்லமுடிபூஞ்சோலை, ஹார்பிள் காட்சி முனை, 9-வது கொண்டை ஊசி வளைவு காட்சி முனை மற்றும் கூழாங்கல் ஆறு போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளது. வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முதலில் கண்டு ரசிப்பது 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆழியாறு அணை காட்சி முனை ஆகும்.

இந்த காட்சி முனை பகுதியில் இருந்து ஆழியாறு அணை, பசுமையான ஆனைமலை விவசாய நிலங்கள் ரம்மியமாக காட்சி அளிக்கும். ஆனால் அந்த காட்சி முனை, கடந்த 2 ஆண்டுகளாக வனத்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது.

கோடை விழா

இதேபோன்று வால்பாறை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது கூழாங்கல் ஆறுதான். இது வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் குளித்து விளையாடி மகிழக்கூடிய ஒரே சுற்றுலா தலமாக விளங்குகிறது. அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய கூழாங்கல் ஆற்று பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. குறிப்பாக ஆண் மற்றும் பெண் கழிப்பிட வசதி, உடை மாற்றுவதற்கான வசதி, அமர இருக்கைகள் இல்லை.

இதற்கிடையில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெற உள்ளது. அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை உயர்த்த சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பொலிவுபடுத்த வேண்டும் என்று வால்பாறை பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

உரிய பராமரிப்பு

இதுகுறித்து வால்பாறை பகுதி மக்கள் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோடை விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் சுற்றுலா தலங்கள் அடிப்படை வசதிகள் இன்றி பொலிவிழந்து கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறையலாம். இதன் மூலம் வியாபாரம் உள்பட வால்பாறையின் பொருளாதாரம் சரிய வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க அனைத்து சுற்றுலா தலங்களையும் உரிய பராமரிப்பு செய்து, பொலிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக கூழாங்கல் ஆற்று பகுதியை யார் பராமரிப்பது என்பது இதுவரையில் தெரியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே அதை பொதுப்பணித்துறையினரோ அல்லது வனத்துறையினரோ தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்கு ஆதிவாசி மக்களுக்கு அங்காடிகள் அமைத்து கொடுத்து, வனவிளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், ஆற்று பகுதியை பராமரிப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய போலீஸ்சாரை பணியில் அமர்த்தி அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்