நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மின்னல் தாக்கி விவசாயி பலி
நெல்லையில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
நெல்லையில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
திடீர் மழை
நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தையொட்டி வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. இதனால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கி வருகின்றனர்.
நேற்றும் வழக்கம்போல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் மேக மூட்டங்கள் சேர்ந்து இடி, மின்னலுடன் திடீர் மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பழைய பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியானார்.
விவசாயி பலி
நெல்லை பேட்டை மலையாளமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50), விவசாயி. இவர் நேற்று தனது மாடுகளை வயலில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். மாலையில் மழை பெய்ததால், அவற்றை வீட்டுக்கு அழைத்து வரச்சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மூர்ச்சையானார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
30 மின்கம்பங்கள் சாய்ந்தன
மழையின்போது சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. குறிப்பாக தச்சநல்லூர் பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டன. தச்சநல்லூர் புறவழிச்சாலையில் மின்கம்பத்தின் மீது மரம் முறிந்து விழுந்தது.
இதனால் தாழையூத்து மற்றும் டவுன் பொருட்காட்சி திடலில் இருந்து வரும் 33 கிலோ வோல்ட் மின்பாதையில் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் நெல்லையில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மின் வினியோகம் பாதிப்பு
சூறைக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்ததையொட்டி தச்சநல்லூர், சங்கரன்கோவில் ரோடு, புறவழிச்சாலை பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் நெல்லை மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி, நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் தலைமையில் மின் ஊழியர்கள் சென்று உடனுக்குடன் அதனை சரிசெய்து அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகத்தை சீரமைத்தனர். மேலும் இவர்களுக்கு உதவியாக தீயணைப்பு நிலைய வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.