அமலாக்கத் துறை கேட்ட 250 கேள்விகள்; செந்தில் பாலாஜி அளித்த முக்கிய 3 பதில்கள்...!!!

அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி 'தெரியாது' 'நினைவில்லை' 'அது எனது பணம் இல்லை' என பதில் அளித்து உள்ளார்.

Update: 2023-08-10 08:16 GMT

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்த நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியை கடந்த 7-ந் தேதியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து வைத்து உள்ளனர்.

கேள்விகள் அனைத்தும் வெள்ளை பேப்பரில் 'டைப்' செய்யப்பட்டு அதற்கு செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. திங்கட்கிழமை மாலையில்தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்ததால் அன்றிரவு அவரிடம் அதிக நேரம் விசாரணை நடைபெறவில்லை.

செவ்வாய்க்கிழமையில் இருந்துதான் முழுமையான விசாரணை தொடங்கியது. அமலாக்கத்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்குகளின் ஸ்டேட்மெண்டை வைத்துக் கொண்டு விசாரணை நடைபெறுவதுடன், சமீபத்தில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 250 கேள்விகளுக்கு அவர் பதில் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி 'தெரியாது' 'நினைவில்லை' 'அது எனது பணம் இல்லை' என்று பதில் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ச்சியாக அவரிடம் கேள்வி கேட்காமல் விசாரணைக்கு இடையே அவருக்கு ஓய்வும் கொடுக்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வழங்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழுவினர் எப்போதும் அங்கு கீழ் தளத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலையில் அவர் நடைபயிற்சி செய்வதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நேற்று அவருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேன்ட், சட்டை, லுங்கி, பனியன், பேஸ்ட், பிரஷ் ஆகியவைகளை கொண்டு சென்று கொடுத்தார். அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

செந்தில் பாலாஜியிடம் அவரது சகோதரர் அசோக் பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிக கேள்விகள் கேட்டுள்ளனர். செந்தில் பாலாஜியின் மனைவி வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரித்து உள்ளனர்.

சனிக்கிழமை வரை செந்தில் பாலாஜியிடம் இந்த விசாரணை நடைபெறும் என்றும் அதன் பிறகு அவரை சிறையில் அடைக்க நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி தெரிவித்து வரும் பதில்கள் அனைத்தையும் தனி வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். அதே போல் எழுத்துப்பூர்வ பதிவையும் வாங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்