கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் குவிந்து கிடக்கும் தக்காளி கழிவுகள்- சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் குவிந்து கிடக்கும் தக்காளி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளார்கள்.

Update: 2022-11-26 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் குவிந்து கிடக்கும் தக்காளி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளார்கள்.

காய்கறி சந்தை

கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கறி சந்தை உள்ளது .இந்த சந்தை கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு சொந்தமானதாகும். சந்தைக்கு தக்காளி, பொறியல் தட்டபயிறு, வாழைக்காய், வாழை இலை, கத்தரிக்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி, பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறி வகைகள் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து விவசாயிகள் பறித்து வந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வருகிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் ஏலத்தில் தங்களது காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

தக்காளி கழிவுகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் மழை நீர் மற்றும் கரும்புள்ளி உள்ள தக்காளிகளை விவசாயிகள் தினசரி காய்கறி சந்தையில் விற்க முடியாமல் போனது. பல விவசாயிகள் கொண்டுவந்த தக்காளிகளை தினசரி காய்கறி சந்தை வளாகப் பகுதியில் உள்ள மரத்தடியிலும், குப்பையிலும் கொட்டி சென்றனர். தற்போது இந்த தக்காளி கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தினசரி காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகள் காய்கறி சந்தையில் தினசரி சேரும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றினால் கழிவுகள் சேர வாய்ப்பில்லை என்றனர்.

தொற்றுநோய் அபாயம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் குப்பையில் வீசப்பட்ட தக்காளி கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சந்தைக்கு வருபவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் தொற்று நோய் பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் குவிந்துள்ள குப்பைகளை கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றி தினசரி காய்கறி சந்தை பகுதியில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்