கடலூரில் தக்காளி, சாம்பார் வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை

கடலூரில் தக்காளி, சாம்பார் வெங்காயம் விலை கிடு, கிடு வென உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-02 18:45 GMT

விலை உயர்வு

தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, பீன்ஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கடலூரில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு இருந்த காய்கறிகளின் விலையில் தற்போது பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 48 ரூபாயில் இருந்து ரூ.52, ரூ.72, ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு, நேற்று ரூ.92 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்த விற்பனை கடையில் ரூ.84-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகள் கவலை

சாம்பார் வெங்காயம் ரூ.80-ல் இருந்து ரூ.95 ஆகவும், மிளகாய் 80 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது. இது தவிர 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.220 ஆகவும், பீன்ஸ் 100 ரூபாயில் இருந்து ரூ.110 ஆகவும் அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

முன்பு ஒரு கிலோ தக்காளி, சாம்பார் வெங்காயம் வாங்கிய மக்கள், இப்போது குறைத்து கால் கிலோ, அரை கிலோ அளவுக்கு வாங்கி வருகின்றனர். குறைந்தது கால் கிலோ மிளகாய் வாங்கிய மக்கள், இப்போது, 50 கிராம், 100 கிராம் அளவுக்கு குறைத்து வாங்கி வருகின்றனர்.

தேங்காய் சட்னி

இது பற்றி இல்லத்தரசிகள் கூறுகையில், முன்பு வீடுகளில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி அரைத்து வைப்போம். ஆனால் இப்போது தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தக்காளி வாங்கவே சிரமமாக இருக்கிறது. சாம்பாருக்காக ஒரே ஒரு தக்காளியை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டோம். தக்காளி சட்னிக்கு பதிலாக தேங்காய் சட்னி அரைத்து வருகிறோம்.

பச்சை மிளகாயை குறைத்து, காய்ந்த மிளகாய் பயன்படுத்தி வருகிறோம். அசைவத்திற்கு இஞ்சி அதிகமாக பயன்படுத்தி வந்தோம். இப்போது அதை குறைத்து விட்டோம். வாசத்திற்கு மட்டும் போடும் நிலைமைக்கு வந்து விட்டோம். இந்த விலைவாசி எப்போது குறையும் என்று தெரியவில்லை என்றனர். இதேபோல் பெரும்பாலான ஓட்டல்களிலும் தக்காளி சட்னிக்கு பதிலாக தேங்காய் சட்னியே இடம் பெறுகிறது. விற்கிற விலைவாசியில் தக்காளி சட்னி வைத்தால் கட்டுப்படியாகது என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்