தக்காளி விலை மீண்டும் உயர்வு

நெல்லையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து நேற்று கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-07-27 19:55 GMT

நெல்லையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து நேற்று கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விளைச்சல் பாதிப்பு

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்த போதிலும் போதிய பலன் கிடைக்கவில்லை. தக்காளி விலை படிப்படியாக ரூ.200 வரையிலும் அதிகரித்து, பின்னர் சற்று குறைய தொடங்கியது. கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்ற தக்காளியின் விலை மேலும் குறையும் என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தக்காளி ரூ.150-க்கு விற்பனை

ஆனால் அதற்கு மாறாக தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.16 உயர்ந்து ரூ.116-க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவே தக்காளி வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

இதேபோல் இஞ்சி விலையும் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.265-ல் இருந்து ரூ.270-ஆக உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் ரூ.300-க்கும் அதிகமாக விற்கப்பட்டது. உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.85-ல் இருந்து ரூ.72 ஆக குறைந்துள்ளது. மிளகாய் விலை சற்று குறைந்து ரூ.64-க்கு விற்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்