நாளுக்கு நாள் ஏறும் தக்காளி விலை: அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

Update: 2023-07-31 12:44 GMT

சென்னை,

தினமும் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியால் ஏழை, நடுத்தர மக்கள் பிழைப்பு நடத்துவதே திண்டாட்டமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது.

தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி பழத்தை பறிக்கும் தொழிலாளிக்கு கூட கூலிகொடுக்க முடியாத அளவுக்கு தக்காளி விலை இருந்த நிலை மாறி, இன்று தங்கம் போல் கிராம் கணக்கில் தக்காளி விற்பனை செய்யும் அளவுக்கு விலை சென்று விட்டது.

இந்த நிலையில், முதலில் தக்காளி விலை ரூ.60-ஆக இருந்த நிலையில், தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு நியாயவிலை கடைகளின் மூலம் தக்காளி விற்பனை செய்து வருகிறது. அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்து வரும் நிலையில், மேலும் 200 கடைகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் அத்துறையை சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன்,

தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை நடத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எங்களை பொறுத்தவரைக்கும் 35 ஆயிரம் கடைகளில் விற்கலாம் என்றால் கூட தக்காளி கிடைப்பது என்பது சிக்கலாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு நியாயவிலை கடைகளில் சராசரியாக 50 கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மொத்தமாக பண்ணை பசுமை கடைகளின் மூலமாக அம்மா உணவகம் போன்ற மற்ற இடங்களில் விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

சராசரி விற்பனையை விட நான்கு மடங்கு விற்பனை இப்பொழுது கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இயற்கையினுடைய கோளாறுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம்.  இது எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து செய்யக்கூடிய வேலை. முதலில் விவசாய பெருமக்கள் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், கனிகள் ஆகியவற்றை எந்தெந்த காலகட்டங்களில் பயிர் செய்தால் நியாயமான விலை கிடைக்கும், இதுபோன்ற தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படும் என்பதை எல்லாம் வேளாண்துறையின் மூலமாக அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரசாரமாக எடுத்து செல்ல வேண்டும்.

கூட்டுறவுத்துறையை பொறுத்தவரை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் அவர்களுக்கு தேவையான நிதி வசதிகளை செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து வேளாண்துறையோடு கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை ஆகிய துறைகளுடனும் கலந்து பேசி இருக்கிறோம்.

உயர்மட்ட அளவில் பேசி முடித்தவுடன் அடுத்த ஆண்டு பருவங்களில் உற்பத்தி குறைகின்ற நேரங்களில் நாம் எப்படி அந்த உற்பத்தியை பெருக்குவது என்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். எப்படி கடந்து வர வேண்டும் என்பதற்கான திட்டங்கள் எதிர்காலத்தில் தயாராக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்