விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆள்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆள்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடந்த 8 ஆண்டுகளாக சுங்கவரி வசூல் செய்யும் பணியை செய்து வருகிறோம். இந்த சுங்கச்சாவடியில் 12 வசூல் செய்யும் வழித்தடங்கள் உள்ளன.
கடந்த 8 ஆண்டுகளாக 54 பேரை வைத்து வேலை வாங்கிய நிறுவனம், கடந்த 6 மாதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் வெறும் 26 பேரை மட்டுமே வைத்து வேலை செய்ய சொல்கிறது. இதனால் 2 வழித்தடங்களுக்கு ஒரு நபர் பணிபுரியும் நிலை ஏற்படுகிறது.
ஆள்குறைப்பு நடவடிக்கை
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு பணிச்சுமையும், மனஅழுத்தமும் ஏற்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள பாஸ்டேக் என்ற தொழில்நுட்ப கருவியை பொருத்தியுள்ளதால் ஆட்களுக்கு வேலை இல்லாததுபோல் கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கு பணிமாற்றம் செய்கிறார்கள்.
பணிமாற்றம் விரும்பவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் நாங்கள் பல இன்னல்களில் பணிபுரிந்து வருகிறோம். இந்தியாவில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் ஆட்குறைப்பு என்பது இல்லை. தமிழ்நாட்டில் சில சுங்கச்சாவடியில் மட்டும் நிர்வாகத்தினர் கலந்துபேசி ஆள்குறைப்பு என்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
ரத்து செய்ய வேண்டும்
இதனால் நாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதோடு எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. 8 ஆண்டுகளாக இந்த தொழிலையை நம்பி பணியாற்றிய நிலையில் தற்போது இத்தொழிலை விட்டு வேறு ஏதாவது தொழில் செய்யவும் எங்களுக்கு எவ்வித பொருளாதார வசதியும் இல்லை.
இந்த வேலை இல்லாவிடில் எங்களது குடும்பத்தினர் பசியும், பட்டினியுமாக இறக்கும் நிலை ஏற்படும். எனவே தாங்கள் இதில் தலையிட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிர்வாகத்தை அழைத்து பேசி எங்களுடைய பணி நிரந்தரம் குறித்து ஆலோசனை செய்து ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.