தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
இன்று மற்றும் வரும் 24-ந் தேதி என 2, 4-ம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது
இதன்படி பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) வருடாந்திர நாட்காட்டியில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் பள்ளி வேலை நாளாக இருந்த 13-ந் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்த இந்த மாதத்திலும் சனிக்கிழமையான இன்று மற்றும் 24-ந் தேதி என 2, 4-ம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொடக்க பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து இந்த நிகழ்வை முறையாக நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.